இங்கிலாந்துடனான 3 ஆவது டெஸ்ட்: 99 ஓட்டங்களுடன் சுருண்டது பாகிஸ்தான்


இங்கிலாந்து அணியுடனான 3 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி  தனது முதல் இன்னிங்ஸில் 99 ஓட்டங்களுடன் சகல விக்கெட்டுகளையும் இழந்துள்ளது.துபாயில் நடைபெறும் இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு பாகிஸ்தான் அணி தீர்மானித்தது. எனினும் 44 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் 7 ஆவது விக்கெட்டையும் இழந்து நெருக்கடிக்குள்ளானது பாகிஸ்தான் அணி.

அவ்வணி ஒரு ஓட்டம்தானும் ஓவரில் ஒரு ஓட்டம்தானும் பெறுவதற்கு முன்ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் தௌபீக் உமர் ஆட்டமிழந்தார்.  அஸார் அலி (1), யூனிஸ்கான் (1), அணித்தலைவர் மிஸ்பா உல் ஹக் (1), மொஹமட் ஹாபிஸ் (13), அட்னன் அக்மால் (6),  அப்துர் ரஹ்மான் (1) ஆகியோரும் சொற்ப ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர்.

இதனால் 44 ஓட்டங்களை மாத்திரம் பெற்ற நிலையில் 7 ஆவது விக்கெட்டை  பாகிஸ்தான் அணி இழந்தது.

மத்திய வரிசை வீரர் அஸாட் சபீக் 45 ஓட்டங்களைப் பெற்றார். உமர் குல் 13 ஓட்டங்களையும்  சயீட் அஜ்மல் 12 ஓட்டங்களையும் பெற்றனர்.

இங்கிலாந்து பந்துவீச்சாளர்களில் கிறிஸ் புரோட் 36 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஜேம்ஸ் அண்டர்சன் 35 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும் மொன்டி பனேஸர் 25 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். கிறேம் ஸ்வான் ஒரேயொரு ஓவர் பந்துவீசி ஓட்டமெதுவும் கொடுக்காமல் ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.

Related posts: