பதிவு

காத்தான்குடி நகரசபைக்கு எதிராக ஆரையம்பதி பிரதேச சபைத் தலைவர் தலைமையில் உண்ணாவிரதம்

v1

காத்தான்குடி நகரசபை ஆரையம்பதி பிரதேசத்திற்குள் அத்துமீறிச் செயற்படுவதாக தெரிவித்து ஆரையம்பதி பிரதேச சபைத் தலைவர் திருமதி  மேரி கிருஷ்ணகாந்தன் தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை காலை உண்ணாவிரதப் போராட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டது

காத்தான்குடி நகரசபை தங்களது எல்லைக்குரிய நிலங்களை ஆக்கிரமிப்புச்செய்து வருவதைக் கண்டித்தே இந்த போராட்டம் நடத்தப்படுவதாக, இப்பிரதேச சபை அலுவலகத்தின் முன்னால் உண்ணாவிரதத்தில் ஈடுப்பட்டுள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்.

காத்தான்குடி நகரசபை தமது பிரதேச செயலக எல்லையை நிர்ணயம் செய்து தமது பகுதிக்குரிய நிலங்களை ஒப்படைக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆரையம்பதி பிரதேச சபையின் 7 அங்கத்தவர்கள் மற்றும் பல பொதுமக்களும் இந்த உண்ணாவிரதத்தில் கலந்துகொண்டுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான பா. அரியநேத்திரன், சீ. யோகேஸ்வரன், பொன். செல்வராசா, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரட்ணம் ஆகியோர் உண்ணாவிரதம் மேற்கொள்ளப்படும் இடத்திற்கு  சென்று பார்வையிட்டனர்.

ஆரையம்பதி பிரதேச செயலகத்திற்கு முன்னால் மண்முனை பிரதேச செயலகத்திற்கான வீதியோரத்தில் 7 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து ஆரையம்பதி மக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மண்முனை பிரதேச வடக்கு எல்லையிலும் காத்தான்குடி நகரசபையின் அத்துமீறிய செயற்பாடு நிறுத்த வேண்டும்.

ஏற்கனவே வழங்கப்பட்ட நீதிமன்றத் தீர்ப்பின்படி காத்தான்குடி முஸ்லிம்களோ வேறு முஸ்லிம்களோ அத்துமீறி குடியேற்றப்படக் கூடாது. ஏற்கனவேயுள்ள முஸ்லிம்கள் வெளியேற்றப்பட வேண்டும்.

கோவில்குளம் பகுதியில் செயற்பட்டு வரும் நீர் விநியோகத் திட்டத்தினால் அங்குள்ள ஜீவனோபாய பயிர்த் திட்டம் அழியும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றன. இது உடன் நிறுத்தப்பட வேண்டும்.

காங்கேயனோடை வீட்டுத் திட்டம் காங்கேயனோடை மக்களுக்கு அவரவர் வளவிலேயே கட்டிக் கொடுக்க வேண்டும்.

திண்மக் கழிவு சேகரிப்புத் திட்டம் காத்தான்குடி நகரசபையின் ஆரையம்பதி பிரதேசத்தில்  செயற்பட்டு வருகிறது. இது நிறுத்தப்பட வேண்டும்.

மாவிலங்குதுறையில் பரம்பரையாக வாழ்ந்து வரும் தமிழ் மக்கள் அப்புறப்படுத்தப்படுவதை உடனடியாக நிறுத்த வேண்டும்.

தமிழர்களின் பூர்வீக பிரதேசமான கடற்கரை பிரதேசத்தினுள் போலியான ஆவணங்களுடன் குடியேறியிருப்பவர்களை வெளியேற்ற வேண்டும். மீளக்குடியேற அனுமதிக்கக் கூடாது.

ஆகிய 7 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து இந்த மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், மட்டக்களப்பு அரசாங்க அதிபர் குறித்த இடத்திற்கு வந்து தமது பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும் எனவும் அவ்வாறு இல்லாவிடின் பெற்றோல் ஊற்றி தீக்குளிக்க தாம் தயங்க மாட்டோம் எனவும் அந்த மக்கள் கூறினர்.

}
Share/Bookmark You can leave a response, or trackback from your own site.


மேலதிக செய்திகள்
July 30th, 2010


Powered by WorldTamils | Donate me Tamil Media