Breaking News
Home / கட்டுரைகள் / ‘சொல்றதைக் கேளு பாப்பா….. நெருப்புப் பூச்சாண்டி வருது’ – புகழேந்தி தங்கராஜ்
'சொல்றதைக் கேளு பாப்பா..... நெருப்புப் பூச்சாண்டி வருது' - புகழேந்தி தங்கராஜ் 100

‘சொல்றதைக் கேளு பாப்பா….. நெருப்புப் பூச்சாண்டி வருது’ – புகழேந்தி தங்கராஜ்

HF Master Card

மைத்திரி அரசில் இலங்கையின் பாதுகாப்பும் பொருளாதாரமும் ஆபத்தில் உள்ளன. விடுதலைப் புலிகள் அமைப்பு மீண்டும் புத்துயிர் பெறுகிற அபாயம் இருக்கிறது’ என்கிற மகிந்த ராஜபக்சவின் அலம்பல் புலம்பல்கள் நின்றபாடில்லை. தேர்தல் வரப்போவதால், மேற்படியாரின் புலம்பல்கள் உச்சஸ்தாயிக்குப் போகக்கூடும்.

கொழும்பிலிருந்து வெளியாகிற ஆங்கில நாளேடான ‘டெய்லி மிர்ரர்’ வாசகர்கள், மகிந்தவின் புலம்பல்களை ரசித்துப் படிப்பதாகத் தெரிகிறது.

‘தேசப் பாதுகாப்பைச் சீனாவிடம் அடமானம் வைத்த உனக்கு இப்படியெல்லாம் பேச வெட்கமாயில்லையா…. ஷட் அப்’ என்று சீறியிருக்கிறார் ஒரு வாசகர்.

‘இருக்கிற மரியாதையையும் இழந்து விடாதே… வாயை மூடிகிட்டுப் போய்கிட்டே இரு’ என்று சிதறுதேங்காய் விடுகிறார் இன்னொருவர்.

‘குழந்தை குட்டிகளுடன் நீ ஆண்டபோதுதான் நாடு அபாயத்தில் இருந்தது, மகிந்த’ என்று நக்கலடிக்கிறார் மற் றொருவர்.

டெய்லி மிர்ரர் வாசகர் ஒருவர் தெரிவித்திருந்த சிங்களச் சொலவடை ஒன்று, இன்றைக்கிருக்கும் நிலையில், ராஜபக்சவுக்கும் பொருத்தமாக இருக்கிறது, மைத்திரிக்கும் பொருத்தமாக இருக்கிறது.

அதைத்தான் – சென்ற இதழில் குறிப்பிட்டிருந்தேன். ‘ஒன்ன பாப்போ….. கோனி பில்லா’ என்கிற அந்த வாசகத்துக்கு நேரடி மொழிபெயர்ப்பு சரிப்பட்டு வராது. அதன் முழு அர்த்தத்தையும் தெரிவித்தாக வேண்டும்.

நம் ஊரில், சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தையை வழிக்குக் கொண்டுவர, ‘பூச்சாண்டிகிட்ட பிடித்துக் கொடுத்துடுவேன்’ என்று பயமுறுத்துகிறார்களே…. அதேதான் இது! ‘சொல்றதைக் கேளு பாப்பா….. நெருப்புப் பூச்சாண்டி வருது’ – இதுதான் அதன் பொருள்.

இதில் வேடிக்கை என்னவென்றால், ‘ஒன்ன பாப்போ, கோனி பில்லா’ என்று மகிந்த, மைத்திரி இருவருமே அதிரிபுதிரியாக எச்சரித்துக் கொண்டிருக்கின்றனர்.

‘மைத்திரி அரசில் புலிகள் மீண்டும் தலைதூக்குகிறார்கள்…. புலி வருது, வந்துகிட்டே இருக்கு, இதோ வந்துடுச்சி’ என்று ‘புலிப் பூச்சாண்டி’ காட்டியே பெரும்பான்மை சிங்கள மக்களின் வாக்குகளை மொத்தமாக அள்ளிவிடவேண்டும் என்பது மகிந்தவின் திட்டம்.

‘சர்வதேச விசாரணைக் கத்தி தலைக்கு மேலே தொங்கிகிட்டே இருக்கு…. தேர்தல்ல போட்டி போட்டு உன் தலையில நீயே மண்ணை அள்ளிப் போட்டுக்காதே…

மட்டுமரியாதையோட அரசியல்ல இருந்தே ஒதுங்கிக்க’ என்று அமெரிக்கப் பூச்சாண்டியைக் காட்டியே, மகிந்தவின் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட வேண்டும் என்பது மைத்திரியின் திட்டம்.

2009ல், மண்ணின் மைந்தர்களான தமிழ் மக்களை சொந்த மண்ணிலேயே விரட்டி விரட்டிக் கொன்று, அந்தப் படுகொலைகளைக் காட்டியே சிங்கள மக்களிடம் செல்வாக்குப் பெற்றது மகிந்த மிருகம். இன்றைக்கு, நிலைமை தலைகீழாகிவிட்டது.

நடந்த இனப்படுகொலைக்கு நீதி கேட்கும் குரல்கள் வலுப்பெற்றுள்ள நிலை. தனக்கு ஆயுதம் கொடுத்தவர்களின் குரலும் அந்தக் குரல்களுடன் இணைந்துவிட்டால், சர்வதேசக் குற்றவாளிக் கூண்டில் நிற்கவேண்டியிருக்கலாம் என்பதை எண்ணி, அஞ்சி நடுங்குகிறது அந்த மிருகம்.

மகிந்தனின் நிலை எவ்வளவு விசித்திரமானதாக மாறிவிட்டது பாருங்கள். எதைக் காட்டி சிங்கள வாக்குகளை அந்த மிருகம் அள்ளமுடிந்ததோ, அதைக்காட்டியே அந்த மிருகத்தை அரசியலில் செல்லாக்காசாக்க முயற்சி நடக்கிறது.

இரண்டே வழிகள்தான் இருக்கின்றன மகிந்தனுக்கு! முதல் வழி – ‘சர்வதேசத்துகிட்ட பிடிச்சுக் கொடுத்துடுவேன்’ என்கிற மைத்திரியின் பயமுறுத்தலை உதாசீனப்படுத்திவிட்டு நாடாளுமன்றத் தேர்தலில் நிற்பது.

‘மைத்திரி அரசு உங்களை புலிகிட்ட பிடிச்சுக் கொடுத்துடும்’ என்று சிங்கள மக்களைப் பயமுறுத்தி, அதன்மூலம் தேர்தலில் வெற்றி பெற்று பிரதமர் நாற்காலியில் அமர்வது. பிரதமர் பதவியைத் துஷ்பிரயோகம் செய்து, சகலவிதத்திலும் சர்வதேச விசாரணைக்கு முட்டுக்கட்டை போடுவது.

இது முதல்வழி மகிந்தனுக்கு! ஆனால், இதற்கும் மைத்திரியின் ஒத்துழைப்பு அவசியம். ஜனாதிபதி பதவியைப் பயன்படுத்தி மகிந்தனுக்கு சர்வதேசச் சிக்கலை உருவாக்க மைத்திரிக்கு ஓரளவு அதிகாரம் இருக்கவே செய்யும்.

சொன்ன பேச்சைக் கேட்காமல் தேர்தலில் நிற்கும் மகிந்தனுக்கு, மைத்திரி இப்படியெல்லாம் தொல்லை தருவாரா மாட்டாரா? சீனாவின் ஏஜென்டாக இருக்கும் ஒருவருக்கு எதிராக, தனது ஏஜென்டை அமெரிக்கா முழுமூச்சில் முடுக்கிவிடுமா விடாதா?

மகிந்தனால் மைத்திரியை முழுமூச்சுடன் எதிர்க்கவும் முடியாது. ஏனென்றால், மைத்திரி மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி. அந்த வகையில் தனக்கிருக்கும் மேலதிக அதிகாரங்களை, மகிந்தவுக்கு எதிராக நேரடியாகவோ மறைமுகமாகவோ அவர் பயன்படுத்தினால் மகிந்தன் கதி என்ன ஆகும் என்று யோசித்துப் பாருங்கள்…..!

மகிந்தவின் முன்னிருக்கும் இரண்டாவது வழி – மைத்திரி போடுகிற பிச்சைப் பதவி எதிலாவது ஒட்டிக்கொண்டு, காலத்தை ஓட்டுவது. அப்படியொரு சுய கேவல சமரசத்துக்கு மகிந்த ஒப்புக்கொண்டு, தேர்தலில் போட்டியிடாமல் இருந்தால், இனப்படுகொலை அல்லது போர்க்குற்றச்சாட்டுகளிலிருந்து அமெரிக்காவின் உதவியுடன் மகிந்தனை பெயிலில் எடுக்க மைத்திரி எல்லாவகையிலும் உதவக் கூடும்.

இதற்கான பேச்சுவார்த்தைகள்தான் மைத்திரிக்கும் மகிந்தவுக்குமிடையே தொடர்கின்றன என்று நினைக்கிறேன் நான். இதைப்பற்றிப் பேசுவதற்காக இல்லாமல், தமிழர்களிடமிருந்து அபகரித்த காணிகளை திருப்பிக் கொடுப்பது தொடர்பாகவா இரண்டுபேருக்கும் ரகசியப் பேச்சுவார்த்தைகள் நடக்கின்றன என்று நினைக்கிறீர்கள்!

இந்த இரண்டாவது வழியில், குற்றவாளிக் கூண்டில் நிற்பதைத் தவிர்க்க மகிந்தனுக்கு அதிக வாய்ப்பிருக்கிறது. அதே சமயம், அது மகிந்தன் செய்துகொள்கிற அரசியல் தற்கொலையாக இருக்கும். மைத்திரி சாக்லேட் சாப்பிடுவதைப் பார்த்து மகிந்தன் விரல் சப்ப வேண்டியதுதான்! மகிந்தனின் அரசியல் அத்துடன் போயே போயிந்தி!

தான் தப்பிச் செல்வதற்கான சுரங்கப்பாதையை தானே அமைத்துக் கொள்வதா, அல்லது மைத்திரி அமைத்துக் கொடுப்பதாகச் சொல்லும் சுரங்கப்பாதை வழியாகத் தப்பிப்பதா? மகிந்தன் தேர்வு செய்யப் போவது எது என்பது விரைவில் தெரிந்துவிடும்.

புலி வருது – என்று சிங்கள மக்களை மிரட்டும் மகிந்தனை விரட்ட, ‘விசாரணை வருது’ என்கிற அஸ்திரம் இருக்கிறது மைத்திரியிடம். மகிந்தன் எதைக் காட்டி வாக்கு வாங்கினானோ அதைக் காட்டியே தேர்தல் களத்திலிருந்து அவனை விரட்ட முயற்சி நடப்பது, ஒன்றரை லட்சம் உயிர்களின் சாபமன்றி வேறென்ன!

மைத்திரி பதவிக்கு வந்ததிலிருந்தே, மகிந்தவுக்கு மறைமுக மிரட்டல் ஆரம்பித்துவிட்டது. ‘சர்வதேசத்தின் தலையீட்டிலிருந்து நாட்டைக் காப்பாற்றியிருக்கிறோம்’ என்று மைத்திரி அரசு மீண்டும் மீண்டும் சொன்னதற்கு ‘மகிந்தனைக் காப்பாற்றியிருக்கிறோம்’ என்பதல்லாமல் வேறென்ன அர்த்தம்? நாங்கள் நினைத்தால்தான் உன்னைக் காப்பாற்ற முடியும் – என்கிற மறைமுக சிக்னல் மகிந்தனுக்குத் தொடர்ந்து அனுப்பப்பட்டு வந்திருக்கிறது.

மகிந்த குடும்பத்தினர் மீது உள்நாட்டில் நடக்கிற ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பான விசாரணைகளை, அரசாங்கம் நினைத்தால் எந்த நேரத்திலும் கைவிடலாம், திசை திருப்பலாம், நத்தை மாதிரி நகர்ந்து போகச் செய்யலாம்.

போர்க்குற்றங்கள் என்றே அழைக்கப்பட்டாலும், இனப்படுகொலை தொடர்பான விசாரணைகள் தொடங்கப்பட்டுவிட்டால் அதை எவராலும் தடுத்து நிறுத்தமுடியாது.

அப்படியே தப்பித்தவறி ஏதாவது முயற்சி நடந்தால், அது எங்களது புலம்பெயர் உறவுகளின் பார்வையிலிருந்து தப்பவே முடியாது. அதனால்தான், அப்படியொரு அச்சுறுத்தலை எதிர்கொள்ளத் தயாராயிருக்கிறாயா – என்று கேட்டு குற்றவாளியை மிரட்டுகிறார்கள்… மகிந்தன் நடுங்குகிறான்.

“அரசியல் அதிகாரங்களைப் பயன்படுத்தி தாங்கள் செய்த குற்றங்களை மூடிமறைப்பதற்காகவே, ஆட்சி அதிகாரங்களைக் கைப்பற்ற சிலர் முயல்கின்றனர்” என்று, மைத்திரிக்கு பக்கபலமாக இருக்கும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா வெளிப்படையாகப் பேசியிருக்கிறார். அவர் இப்போது சொல்வதைத்தான், நாம் எப்போதுமே சொல்லி வருகிறோம். புதிதாகப் பேச என்ன இருக்கிறது?

கொல்லப்பட்ட நமது உறவுகளுக்குக் கிடைக்க வேண்டிய நீதியை வைத்து சிங்கள அரசியல்வாதிகள் நடத்துகிற தெருக்கூத்து முடிவடையும் நிலையை எட்டிவிட்டதென்று தோன்றுகிறது.

நம்மைப் பொறுத்தவரை, மைத்திரியா மகிந்தனா ரணிலா என்பதெல்லாம் கேள்வியேயில்லை. ஒன்றரை லட்சம் உயிர்களில், ஒவ்வொரு உயிருக்கும் நீதி கிடைப்பதை உறுதி செய்வது மட்டும்தான் நமது வேலை. அதை நோக்கியே, நமது ஒவ்வோரசைவும் இருக்க வேண்டும்.

“கொத்துக் குண்டுகளையும் எறிகணைகளையும் வீசி எமது பிஞ்சுகள் குலைகுலையாக அறுத்து நிலத்தில் வீழ்த்தப்பட்ட இடத்தில்,

அவர்கள் சிந்திய குருதியால் சிகப்பேறிய மண்ணில்தான் இந்த பாடசாலைக் கட்டடம் திறக்கப்படுகிறது” என்று சென்றவாரம் கிளிநொச்சியில் சாரதா வித்யாலயத்தின் புதிய கட்டடத்தைத் திறந்துவைத்தபோது முதல்வர் விக்னேஸ்வரன் பேசியதிலிருக்கும் ஒவ்வொரு வார்த்தையையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

நீதியரசராகத் திகழ்ந்த அந்த மனிதர், பேசுவது வெற்று வசனமில்லை….. தனது மக்களுக்கு நீதி கிடைத்தாக வேண்டுமென்கிற ஓர்மத்துடன்தான் இதையெல்லாம் பேசுகிறார் அவர்.

இப்படியெல்லாம் உண்மைகளைப் பேசுவதால், விக்னேஸ்வரன்மீதே புலி முத்திரை குத்த முயற்சி நடக்கிறது. நம்மைப் பொறுத்தவரை, எந்த சமரசமும் இல்லாமல் மக்களின் குரலை எதிரொலிக்கும் விக்னேஸ்வரனை ‘விடுதலைப்புலி’ என்று சொல்வது பொருத்தமானது என்றே தோன்றுகிறது.

அவரது அப்பழுக்கில்லாத அர்ப்பணிப்புக்குக் கிடைத்திருக்கும் அங்கீகாரமாகவே இதை எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. வாழ்த்துக்கள், விக்னேஸ்வரன்!

இரண்டாயிரமாவது (2000) ஆண்டில், யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் 2 குழந்தைகள் உள்ளிட்ட 8 தமிழர்கள் இராணுவ மிருகங்களால் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றஞ்சாட்டப்பட்ட 5 சிப்பாய்களில் ஒரே ஒரு சிப்பாய்க்கு மரணதண்டனை தரப்பட்டிருக்கிறது இப்போது!

செப்டம்பரில் ஐ.நா.மனித உரிமைகள் ஆணையர் அலுவலகத்திலிருந்து போர்க்குற்றங்கள் தொடர்பான அறிக்கை வெளியாக இருக்கிற நிலையில், இந்தத் தீர்ப்பு வெளியாகியிருப்பது ஏன் – என்பதை நம்மைக் காட்டிலும் தெளிவாகப் புரிந்துகொண்டிருப்பார் விக்னேஸ்வரன்.

“குற்றவாளிகள் இராணுவத்தினராகவே இருந்தாலும், அவர்களை முறைப்படி விசாரிக்கவும், தண்டிக்கவும், போதுமான சட்டப் பொறிமுறைகள் உள்நாட்டிலேயே இருக்கின்றன என்பதற்கு இந்தத் தீர்ப்பு ஒரு சான்று” என்று சிங்கள அரசுத் தரப்பிலிருந்து அவசர அவசரமாக அறிக்கைகள் வெளியாகின்றன. (தீர்ப்பு எழுதுவதற்கு முன்பே அறிக்கைகளை எழுதிவிட்டார்கள் – என்று நினைக்கிறேன்.)

15 ஆண்டுகளுக்கு முன் நடந்த குற்றத்துக்கு, இவ்வளவு நாளும் இல்லாத திருவிழாவாக அவசர அவசரமாகத் தீர்ப்பு வழங்கப் பட்டிருப்பதைப் பார்க்கும்போதும், மேலே குறிப்பிட்டதைப் போன்ற அறிக்கைகளைப் படிக்கும்போதும், இலங்கை அரசின் நோக்கத்தைப் புரிந்துகொள்வதற்கு அசாத்திய அறிவெல்லாம் தேவையேயில்லை.

இத்தனைக்கும் தண்டனை அறிவிக்கப்பட்டிருக்கிற ஒரே சிப்பாய்க்கும், அப்பீல் செய்வதற்கான வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. இன்னொரு 15 ஆண்டு தேவைப்படும், அந்த அப்பீல் விசாரணை முடிய!

‘பார்த்தீர்களா எங்கள் நீதி பரிபாலன லட்சணத்தை! மரியாதையாக விலகிக் கொள்ளுங்கள்…. எங்களது போர்க்குற்றங்கள் குறித்து நாங்களே விசாரித்துக் கொள்வதற்கான சகல தகுதிகளும் எங்களுக்கு இருக்கிறது.

சர்வதேச விசாரணையையெல்லாம் ஏறக்கட்டுங்கள்’ என்பது மைத்திரி அரசைப் பொறுத்தவரை சாமர்த்தியமான வாதமாக இருக்கலாம். நமக்கு இந்த வாதத்தைச் சகித்துக் கொள்ள முடியவில்லை.

2000 ஆண்டில் மிருசுவிலில் கொல்லப்பட்ட 8 பேரும், தமிழர்கள் என்கிற ஒரே காரணத்துக்காகக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அவர்களென்ன, ராணுவத்தை எதிர்த்து ஆயுதம் ஏந்தியா போராடினார்கள்?

8 அப்பாவிகள் கொல்லப்பட்டது தொடர்பான விசாரணை 15 ஆண்டுகள் இழுத்தடிக்கப்படாமல், உரிய நேரத்தில், முறைப்படி – சட்டப்படி – நியாயப்படி – நடத்தப்பட்டிருந்தால் பத்துப் பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு முன்பே தீர்ப்பு வெளியாகியிருக்கும்…… சம்பந்தப்பட்ட 5 சிப்பாய்களுக்கும் சேர்த்தே மரணதண்டனை வழங்கப்பட்டிருக்கும்.

வீண் தாமதத்தின் மூலம் 4 பேரைத் தப்பிக்க வைத்திருக்கிறார்கள்… இதைக்காட்டியே, மேல்முறையீட்டில் தப்பித்துவிட முடியும், இப்போது தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் ஒரே சிப்பாயும்!

மிருசுவில் சம்பவம் தொடர்பான நத்தைவேக விசாரணை ஒன்றே போதும் – 2009 இனப்படுகொலை தொடர்பாக சர்வதேச விசாரணை கோருவதற்கு!

“எட்டு பேர் படுகொலை வழக்கையே இப்படி இழுத்தடித்திருக்கிற ஓர் அரசு, ஒன்றரை லட்சம் பேர் படுகொலை வழக்கை எப்படியெல்லாம் இழுத்தடிக்கக்கூடும்… இதை அனுமதிக்கப் போகிறீர்களா’ என்று சர்வதேசத்தின் சட்டையைப் பிடித்து உலுக்கியாக வேண்டும் நாம்!

இன்னொன்றையும் நாம் கேட்டாகவேண்டும் சர்வதேச மேதாவிகளிடம்! மிருசுவில்லில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் சாதாரணச் சிப்பாய்கள். அவர்களைக் காப்பாற்றவே இந்த அளவுக்கு மெனக்கெட்டிருக்கிறது, இனவெறியோடும் பிணவெறியோடும் திரிகிற ஒரு அரசு.

தனது தளபதிகள் மீதும் தலைவர்கள் மீதும் பாய்கிற இனப்படுகொலை வழக்கை அந்த அரசு சட்டுபுட்டென்று முடித்துவிடும் என்று எதிர்பார்க்கிறதா சர்வதேசம்? உண்மைகளை வெளிக்கொண்டு வரவும், குற்றவாளிகள் தண்டிக்கப்படவும் முழுமூச்சுடன் அந்த மிருகம் முயலும் என்று நம்புகிறார்களா?

அட, போங்கப்பா!

புகழேந்தி தங்கராஜ்
mythrn@yahoo.com

Comments

comments

Leave a Reply

Your email address will not be published.

shop giày nữthời trang f5Responsive WordPress Themenha cap 4 nong thongiay cao gotgiay nu 2015mau biet thu deptoc dephouse beautifulgiay the thao nugiay luoi nutạp chí phụ nữhardware resourcesshop giày lườithời trang nam hàn quốcgiày hàn quốcgiày nam 2015shop giày onlineáo sơ mi hàn quốcf5 fashionshop thời trang nam nữdiễn đàn người tiêu dùngdiễn đàn thời tranggiày thể thao nữ hcm