ஐக்கிய நாடுகள் சபை நோக்கி மூன்று கோரிக்கைகளை முன்வைத்து மனிதநேய நடை பயணம் மேற்கொண்டுள்ள சிவந்தன், இன்று 22வது நாளாக தனது நடை பயணத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றார்.
இன்று செஞ்சோலை படுகொலை நினைவு நாள் என்பதால், இன்றைய நடை பயணம் செஞ்சோலையில் படுகொலை செய்யப்பட்ட மாணவிகளுக்கு அக வணக்கம் செலுத்தி ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
கடந்த சில நாட்களாக மலைப் பாங்கான பிரதேசங்கள் ஊடாகவே சிவந்தன் தனது மனிதநேய நடை பயணத்தை மேற்கொண்டு வருகின்றார்.
பரிஸ் நகரில் இருந்து 407 கிலோமீற்றர் தூரத்திலுள்ள சிவந்தன் ஜெனீவாவை அடைவதற்கு இன்னும் 150 கிலோமீற்றர்களே இருக்கின்றன. லண்டனில் இருந்து மொத்தம் 802 கிலோமீற்றர்கள் நடந்துள்ள சிவந்தனுடன், இன்று 6 பேர் இணைந்து நடக்கின்றனர்.
இதேவேளை, சிவந்தனது மனிதநேய நடை பயணத்திற்கு ஆதரவு வழங்கும் நோக்கில் சுவிற்சர்லாந்து சூரிச் நகரில் இருந்து மூவர் ஜெனீவா நோக்கிய மனிதநேய நடை பயணத்தை இன்று ஆரம்பிக்கின்றனர்.
எதிர்வரும் 20ஆம் நாள் சிவந்தன் ஜெனீவாவை சென்றடைந்ததும், அங்கு கவனயீர்ப்பு எழுச்சிப் பேரணியும், மனு கையளிப்பும் இடம்பெற இருப்பதால், இதில் கலந்துகொள்ள ஐரோப்பிய தமிழ் மக்கள் அணிதிரண்டு வருகின்றனர்.
சிறீலங்கா அரசு மீது சுயாதீன போர்க்குற்ற விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும், தடுப்பு முகாம்களில் உள்ளவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும், மனித உரிமைகள் மதிக்கப்படும்வரை சிறீலங்காவைப் புறக்கணிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து ஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி நீதிகேட்டு சிவந்தன் மனிதநேய நடை பயணத்தை மேற்கொண்டு வருகின்றார்.












Posted in
Tags: 






